< Back
மாநில செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
29 Aug 2023 1:29 AM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க குவிந்தனர். அவர்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கொப்பரை சுப்பிரமணியன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது கொப்பரை சுப்பிரமணியன் கழுத்தில் மீன் மாலை அணிந்து இருந்தார்.

அவர்கள் கலெக்டரிடம் வழங்கிய வழங்கிய மனுவில், ''நெல்லை டவுன் நயினார்குளத்தில் மீன் வளர்க்க ரூ.1.35 லட்சம் செலுத்தி ஏலம் எடுத்தோம். தற்போது குளத்தில் தண்ணீர் வற்றி குறைந்தளவு மட்டுமே கிடக்கிறது. மழையை எதிர்பார்த்து ரூ.40 ஆயிரத்துக்கு கட்லா, ரோகு வகை மீன்குஞ்சுகளை வாங்கி விட்டோம். இந்த நிலையில் குளத்தில் வளர்ந்துள்ள மீன்களை பிடிக்க பொதுப்பணித்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால் மீன்கள் செத்து மிதந்து வருகிறது. எனவே உடனடியாக மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

நெல்லை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சண்முகவேல் தலைமையில் ெபாதுமக்கள் கொடுத்த மனுவில், ''நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் வசித்த எங்களை நெல்லையை அடுத்த பேட்டை காந்திநகர் குடியிருப்புக்கு மாற்றினர். அங்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

சங்கர்நகர் பேரூராட்சி தலைவர் பட்டுலெட்சுமி, துணைத்தலைவர் தங்கம் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில், ''சங்கர்நகர் பேரூராட்சியில் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கவுன்சிலர் தேர்தலில் தோல்வியடைந்தவர் மற்றும் சிலர், பேரூராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் தலைவர், முன்னாள் தலைவர் மீது பொய் புகார்களை அளித்து வருகின்றனர். அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்