வேலூர்
பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
|வேலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.
வேலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பொது இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள்.
அதேபோன்று பொதுமக்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து சிறப்பு பூஜை செய்து வணங்குவார்கள். விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த சில நாட்களாக வேலூரில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் அதிகளவு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேதாஜி மார்க்கெட், லாங்குபஜார், மண்டித்தெருவில் குவிந்தனர்.
அவர்கள் வாழைஇலை, விளாங்காய், நிலக்கடலை, பழவகைகள் மற்றும் சிறிய அளவிலான வண்ண வண்ண குடைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் கோட்டை காந்தி சிலை முன்பு உள்பட சில இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பூக்கள் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை திடீரென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கும், முல்லைப்பூ ரூ.800-க்கும், சாமந்தி ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், ரோஜாப்பூ ரூ.200-க்கும், கேந்தி ரூ.30-க்கும், கோழிக்கொண்டை ரூ.40-க்கும் விற்பனையானது.
விநாயகர் சதுர்த்தி விழா, பூக்களின் வரத்து குறைவு உள்ளிட்டவற்றால் வழக்கத்தைவிட ரூ.200 முதல் ரூ.300 வரை பூக்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விலை வழக்கத்தை விட ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகமாக விற்பனையானது. வேர்க்கடலை செடி, கம்பு செடி ஜோடி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை திடீர் உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.