தர்மபுரி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.46 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
|தர்மபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.46 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 1.98 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 322 பள்ளிகளைச் சேர்ந்த 11,265 மாணவர்களும், 10,715 மாணவிகளும் என மொத்தம் 21,980 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார்கள்.
இவர்களில் 9,759 மாணவர்களும், 9,904 மாணவிகளும் என மொத்தம் 19,663 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.63 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 92.43 ஆகும். மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 89.46 ஆகும்.
மாணவிகள் கூடுதல் தேர்ச்சி
இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.80 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பில் தர்மபுரி மாவட்டத்தின் தேர்ச்சி 91.44 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 1.98 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது.
தர்மபுரி மாவட்டம் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 27-வது இடத்தை பிடித்துள்ளது.
அரசு பள்ளிகள்
தர்மபுரி மாவட்டத்தில் 218 அரசு பள்ளிகளை சேர்ந்த 7,777 மாணவர்கள், 8,023 மாணவிகள் என மொத்தம் 15,800 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதினார்கள். இவர்களில் 6,387 மாணவர்களும், 7,268 மாணவிகளும் என மொத்தம் 13,655 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி 86.42 சதவீதம் ஆகும். அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி 82.13 சதவீதமாகும். அரசு பள்ளி மாணவிகளின் தேர்ச்சி 90.59 சதவீதமாகும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகள் 8.46 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 88.76 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி 2.34 சதவீதம் குறைந்து உள்ளது.