தேனி
மயானத்திற்கு கூடுதல் இடம் கேட்டு பொதுமக்கள் தர்ணா
|ஆண்டிப்பட்டி அருகே மயானத்திற்கு கூடுதல் இடம்கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயானத்திற்கு இடம்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மயானம் (சுடுகாடு) உள்ள பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நூலகம், குப்பைக்கிடங்கு, உரக்கிடங்கு, கிராம சேவை மையம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனால் மயானத்தின் பரப்பளவு சுருங்கியது. மேலும் அங்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் எதுவும் இன்று வரையில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக காணப்படுகிறது. இதனால் மயானத்திற்கு கூடுதல் இடம் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மயானம் மற்றும் அரசு கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் மயானத்திற்கு போதிய இடம் இல்லாத நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறத்தினர். இதனால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் நேற்று மீண்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பணியை நிறுத்தும் படி கூறி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளை நிறுத்திவிட்டு ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர்.
அப்போது மயானத்திற்கு உரிய இடத்தை ஒதுக்கீடு செய்து விட்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்த அதிகாரிகள் மயானத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கிய பின்னர் பணியை தொடங்குவதாக கூறி சென்றனர். பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.