திருவள்ளூர்
நந்தியாற்றில் கலக்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
|திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நந்தியாற்றில் கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நந்தியாறு சோளிங்கர் அருகே உருவாகி அய்யனேரி, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், கோரமங்கலம், அகூர், தரணிவராகபுரம் வழியாக திருத்தணி நகருக்குள் நுழைகிறது. பின் அங்கிருந்து இல்லத்தூர்-ராமாபுரம் இடையே சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இந்த நந்தியாற்று வெள்ளம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல ஊராட்சிகளில் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.
இந்த நிலையில் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்ல புதிதாக கழிவுநீர் கால்வாய் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்தக் கழிவுநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் கழிவுகளை திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள உயர் மட்ட மேம்பாலம் அருகே நந்தியாற்றில் நேரடியாக கலக்கிறது.
ஆற்றில் கழிவுகள் கலப்பதால், குடிநீர் தேவைக்கு மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படும் தண்ணீர் மாசுப்பாடு ஏற்படுகிறது.
எனவே திருத்தணி நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நந்தியாற்றில் கலப்பதை தவிர்த்து, மாற்றுவழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.