காஞ்சிபுரம்
வரதராஜபுரம் ஊராட்சியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
|வரதராஜபுரம் ஊராட்சியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக பகுதியில் செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
இந்த சாலை முடிச்சூர், வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதிக்கு செல்லும் முக்கியசாலையாக உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு பெய்த லேசான மழையில் இந்த சாலை சேறும், சகதியுமாக, குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது சேற்றில் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னே இந்த சாலை படுமோசமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.