திருவள்ளூர்
சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
|கடம்பத்தூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் அடங்கியது கொருக்கம்பேடு கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூவம் மற்றும் மப்பேடு, பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் கொருக்கம்பேட்டில் இருந்து கூவம் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் கொருக்கம்பேட்டில் இருந்து கூவம் செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியமாக உள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், கூலி தொழிலாளிகள் என பலதரப்பட்ட மக்களும் குண்டும் குழியுமான சாலை வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தங்கள் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூவம் முதல் கொருக்கம்பேடு வரை தார் சாலை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டு சாலையோரம் ஜல்லிக்கற்கள் மற்றும் கலவைகள் அனைத்தையும் கொட்டி வைத்துள்ளனர். ஆனால் கடந்த 4 மாதங்களாக தார் சாலை அமைப்பதற்கான எந்த ஒரு பணியும் இதுநாள் வரையிலும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள கூவம் கொருக்கம்பேடு தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.