செங்கல்பட்டு
செங்கல்பட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் மார்க்கெட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
|இடிந்து விழும் நிலையில் உள்ள மீன் மார்க்கெட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விற்பனை நிலையம்
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகர மையப்பகுதியில் மீன் விற்பனை நிலையம், ஆடு இறைச்சி விற்பனை நிலையம், காய்கனி விற்பனை நிலையம் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட இந்த விற்பனை நிலையம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இங்கு உள்ள வணிக வளாகங்கள் செங்கல்பட்டு நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தில் மீன் மார்க்கெட் மட்டும் 55 கடைகள் உள்ளது. இங்கேயே மீனை பதப்படுத்தி கொள்ளவும் விற்பனை செய்யவும் மீனை வெட்டி கொடுக்கவும் ஏற்ற வகையில் அமைந்து உள்ளது.
இடிந்து விழும் நிலையில்
கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த இந்த மீன் மார்க்கெட் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிமெண்டு் பூச்சுகளும் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் சில வியாபாரிகள் தங்கள் கடைகளை தார்ப்பாய் அமைத்து நடத்தி வருகின்றனர.் அனைத்து பக்கவாட்டு சிமெண்டு தூண்களும் அரிப்பு ஏற்பட்டு வெறும் இரும்பு கம்பிகளை கொண்ட எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. சிதிலமடைந்த இந்த மீன் மார்க்கெட்டை புதுப்பித்து தர மீன் விற்பனையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில் ஒரு கட்டமாக கோர்ட்டை அணுகி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடத்தை கட்டித்தர மனு அளித்தனர் அதன் மூலம் சென்னை ஐகோர்ட்டு புதிய கட்டிடம் கட்ட ஆணை ஒன்றை பிறப்பித்தது அதன் அடிப்படையில் தமிழ்நாடு மீன்வளத்துறை 90 சதவீத பங்குடனும் செங்கல்பட்டு நகராட்சி 10 சதவீத நிதி பங்குடனும் மீன் மார்க்கெட்டை கட்டிக்கொடுக்க தற்போது ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.
புதிய கட்டிடம்
இது குறித்து மீன்வளத்துறை துணை இயக்குனரிடம் பேசியபோது:-
துறை ரீதியான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராகி உள்ளது மீதமுள்ள பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு மைய பகுதியில் இயங்கி வந்த இந்த மீன் மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டால் சுற்றுவட்டாரபகுதிகளில் உள்ள கண்ட இடங்களில் மீன் கடை நடத்துபவர்கள் மீன் மார்க்கெட் வளாகத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.