திருவள்ளூர்
காக்களூரில் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
|காக்களூரில் உள்ள விளையாட்டு பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காக்களூரில் ஊராட்சி துறை சார்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. பூங்காவை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பூங்கா அமைக்கப்பட்டவுடன் அந்த பகுதி மக்கள் பூங்காவில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்து வந்தனர். மேலும் குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தது. விடுமுறை நாட்களில் மக்கள் இங்கு வந்து அமர்ந்து நேரத்தை கழித்தனர். பின்னர் நாளடைவில் பூங்காவை முறையாக பராமரிக்காததால் சிறுவர்கள் விளையாடக்கூடிய அனைத்து உபகரணங்களும் துருப்பிடித்து, உடைந்து, பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஆனது.
இதனால் பூங்காவிற்கு வந்து சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நடைபாதைகளில் புல் பூண்டுகள் முளைத்தும் நடை பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. பூங்காவிற்குள் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிக்கான எந்தவித உபகரணங்களும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே பயன்பாடற்ற நிலையில் காணப்படும் பூங்காவில் சிறுவர்கள் விளையாடக்கூடிய அனைத்து உபகரணங்களையும் புதுப்பித்து தருமாறும், உடற்பயிற்சி கூடத்தில் முறையாக உடற்பயிற்சி உபகரணங்களை அமைத்து தர அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.