திருவள்ளூர்
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
|பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சாலை முழுவதும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் முதல் வார்டு பகுதியில் உள்ள தெருவிவாக்கம் சாலையில் நகரம் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கொட்டுவது வழக்கம். இங்கு கொட்டும் குப்பைகளை உடனடியாக அகற்றப்படாமல் அங்கு பெரிய அளவில் குவிந்து கிடக்கிறது.
இந்த குப்பை கூளங்கள் தற்போது அந்த சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது. இந்த சாலை வழியாகத்தான் வெளியகரம், இருதலைவாரிபட்டடை, கீழ் கால் பட்டடை ஆகிய கிராமங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்.
அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மேலும் இந்த சாலையோரத்தில் தான் சுடுகாடு இருக்கிறது. எனவே அந்த பகுதியில் இறந்தவர்களை இந்த சாலை வழியாக தான் சுடுகாட்டுக்குச் சென்று பிணங்களை புதைப்பதும், எரிப்பதும் நடக்கும். தற்போது குப்பைகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் இருப்பதால் சாலை முலுவதும் குப்பை கூளமாக காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே பேரூராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலை முழுவதும் சிதறி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.