< Back
மாநில செய்திகள்
இஸ்லாம் நகர் அரசு பள்ளி வளாகத்தில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

இஸ்லாம் நகர் அரசு பள்ளி வளாகத்தில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
23 May 2023 8:49 AM GMT

இஸ்லாம் நகர் அரசு பள்ளி வளாகத்தில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இஸ்லாம் நகர் பகுதியில் அரசு உயர்நிலைபள்ளி அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட கன்றுகள் மரங்களாக வளர்ந்திருந்தன. கோடை விடுமுறை காரணமாக கடந்த ஒரு மாதமாக பள்ளி மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பச்சலனம் காரணமாக திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த சூறைக்காற்று காரணமாக இஸ்லாம் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்த 2 மரங்கள் வேருடன் சாய்ந்தன. மரங்கள் சாய்ந்து பல நாட்கள் ஆகியும் பள்ளி வளாகத்தில் இருந்து மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளி தொடங்கப்பட உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்