காஞ்சிபுரம்
கிருஷ்ணா கால்வாய் நீர் ஏரியில் கலப்பதற்கு தடையாக செம்பரம்பாக்கம் ஏரியில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
|சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பிரதானமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் முட்புதர் செடிகள் மண்டி கிடப்பதால் கிருஷ்ணா கால்வாய் நீர் ஏரியில் கலப்பதற்கு தடையாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குன்றத்தூர் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரில் சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி. 85.4 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 364.5 கோடி கன அடி ஆகும்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக வரும் நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
முட்புதர் செடிகள்
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கிருஷ்ணாநதி நீர் கால்வாய் வழியாக வந்து செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் இடத்தில் முட்புதர் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் கால்வாய் இருந்து வரும் நீர் ஏரியில் கலக்காமல் தேங்கி விடுகிறது. இந்த முட்புதர் செடிகளை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.