திருவள்ளூர்
வேலஞ்சேரி கிராமத்தில் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
|வேலஞ்சேரி கிராமத்தில் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பொது நூலகம் கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதி மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறன் அதிகரித்தது. மேலும் நூலகத்தில் அரசு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தினசரி நாளிதழ்களும் இருந்ததால், மக்கள் அதிக அளவில் வந்து படித்து வந்தனர்.
இந்த நிலையில் சில ஆண்டுகளாக நூலகம் சரிவர பராமரிக்கப்படாததால் பழுதடைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த 2021-22ம் ஆண்டு ரூ.1.33 லட்சம் மதிப்பில் நூலகம் பழுது பார்த்தல் பணி நடைபெற்றது. இந்த நிலையில் நூலகம் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நூலகத்தை திறந்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.