செங்கல்பட்டு
திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
|திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் வடிகால்வாய்
திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்டபழைய மாமல்லபுரம் சாலையில் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. ஆனால் சாலையை அகலப்படுத்த வில்லை. இதனிடையே ரவுண்டானா பகுதியில் இருந்த பழமை வாய்ந்த மரங்களும் அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை சாலை அகலப்படுத்தி அமைக்கும் பணியை தொடங்கவில்லை. மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடரக்கூடாது என்பதால் சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாவட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு பேரூராட்சி பகுதியில் ஆங்காங்கே பள்ளங் கள் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டும் பணியும் முழுமை அடையவில்லை. தோண்டிய இடங்களில் கால்வாய் பணியும் தொடங்கவில்லை. சில இடங்களில் குறிப்பாக ரவுண்டானா பகுதியில் கான்கிரீட் அமைப்பதற்கான கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.அவை வெளியே நீட்டிக்கொண்டு நிற்பதால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒருவித அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது.
கோரிக்கை
சில இடங்களில் சிறிய ஆஸ்பத்திரிகள், மருந்துக் கடைகள் போன்றவையும் உள் ளது. இந்த இடங்களுக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் கால்வாயை தாண்ட முடியாமல் கீழே இறங்கி மேலே ஏறி வரும் அவல நிலை உள்ளது.
அம்பேத்கர் சிலையில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை நோக்கி செல்லும் இந்த கால்வாய் 15-வது வார்டு பகுதியில் முடிகிறது. இந்த கால்வாய் சென்று முடியும் 15-வது வார்டு பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளது.
மழைக்காலங்களில் இந்த பெரிய கால்வாய் மூலம் வருகின்ற மழை வெள்ளம் குடியிருப்புகளில் புகுந்து சேதம் விளைவிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.