< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசஸ்தலை ஆற்றில் 2 புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கொசஸ்தலை ஆற்றில் 2 புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
19 Dec 2022 5:17 PM IST

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை கொசாஸ்தலை ஆற்று தரைப்பாலத்தில் கட்டப்பட்டு வரும் 2 பாலப்பணிகளை விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப்பாலம் மூழ்கியது

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனபன்சத்திரம் கூட்டுச்சாலை வழியாக பாய்ந்து எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவது வழக்கம். இந்த தரைப்பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தரைப்பாலம் மூழ்கிவிட்டால் வெள்ளம் குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.

பாலங்கள் அமைப்பு

இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு மாற்று மார்க்கத்தில் சென்று வரும் நிலை உள்ளது. மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

ஒதப்பை தரைப்பாலத்தை ஒட்டி வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகனப் போக்குவரத்து 6 நாட்கள் தடை செய்யப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு முன்னதாக ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது பாலம் அமைக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தமிழக அரசு ஒதப்பை கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தில் இடது, வலது புறங்களில் 2 பாலங்கள் அமைக்க முடிவு செய்தது.

பொதுமக்கள் கோரிக்கை

இடது புறத்தில் பாலம் அமைக்க ரூ.11.50 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2019-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.180 மீட்டர் நீளத்தில், 9.50 மீட்டர் அகலத்தில் 8 மெகா தூண்கள் மீது இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வலது புறத்தில் ரூ.13.89 கோடி செலவில் மற்றொரு பாலம் அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 139 மீட்டர் நீளத்தில், 5 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. 8 தூண்கள் அந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கும். இந்த 2 பாலங்களை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்