< Back
மாநில செய்திகள்
திருவாரூரில், புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்படுமா? - பொதுமக்கள்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்படுமா? - பொதுமக்கள்

தினத்தந்தி
|
18 Jan 2023 12:30 AM IST

திருவாரூரில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூரில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இட நெருக்கடி

திருவாரூர் அண்ணா சதுக்கம் அருகில் மின் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மீன் மார்க்கெட் மிகவும் குறுகலான இடத்தில் உள்ளது. இங்கு உள்ள கடைகளின் எண்ணிக்கையும் குறைவு. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப மீன் மார்க்கெட்டில் போதிய கடைகள் இல்லை.

இதனால் இட நெருக்கடியில் வியாபாரிகளும், பொதுமக்களும் தவித்து வருகிறார்கள். வியாபாரிகள் பலர் மார்க்கெட்டை தவிர்த்து திருவாரூர் நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வருகிறார்கள்.

சுகாதார சீர்கேடு

இவ்வாறு சாலையோரங்களில் மீன்கள் விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையோரங்களிலேயே மீன்களை வெட்டி சுத்தம் செய்வதால், துர்நாற்றம் வீசுகிறது. மீன் கழிவுகளும் முறைப்படி அப்புறப்படுத்தப்படுவது இல்லை.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திருவாரூர் நகரில் கொடிக்கால்பாளையம், பழைய பஸ் நிலையம், நேதாஜி சாலை, வாழவாய்க்கால் ரவுண்டானா, காந்தி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் மீன்கள் விற்கப்படுகின்றன.

புதிய மீன்மார்க்கெட்

மேலும் பல இடங்களில் சாலையோரங்கள் மீன்கடைகளாக மாறி வருகின்றன. அதிகரித்து வரும் மீன் கடைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதை தடுக்க திருவாரூர் நகரில் புதிதாக மீன் மார்க்கெட் கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் மீன் மார்க்கெட் உள்ளது.

ஆனால் மாவட்ட தலைநகரமான திருவாரூரில் மீன் மார்க்கெட் அமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. சாலையோரம் செயல்படும் மீன், இறைச்சி கடைகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த மீன்-இறைச்சி மார்க்கெட் கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து திருவாரூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி ரமேஷ் கூறியதாவது:-

உழவர் சந்தை அருகில்...

திருவாரூர் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் இடவசதி இல்லை. நகரில் பல்வேறு தெரு சந்திப்புகளிலும், சாலையோரங்களில் மீன்களை விற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த கடைகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், மீன், இறைச்சி கழிவுகளை முறையாக அகற்றும் வகையிலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன், இறைச்சி விற்பனையை ஒழுங்குபடுத்த புதிதாக மார்க்கெட் கட்ட வேண்டும். இதை பழைய பஸ் நிலையம் உழவர் சந்தை அருகில் அமைத்தால் மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்