மயிலாடுதுறை
கொள்ளிடம் அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் மண் சாலை
|கொள்ளிடம் அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் மண் சாலையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கொள்ளிடம் அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் மண் சாலையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மண் சாலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் மெயின் சாலையில் இருந்து அக்ரஹாரம், மேலத்தெரு ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை மண் சாலையாகும். இந்த சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளது.
மழை பெய்யும்போது சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குண்டும், குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் எருக்கூர் பகுதிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிப்பட்டு வருகிறார்கள்.
விளைபொருட்கள்
மண் சாலையாக இருப்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எருக்கூர் கிராமத்தில் இருந்து நெல், பருத்தி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு எடுத்துச்செல்லப்படுவது வழக்கம்.
நடந்து செல்லவே சிரமமாக இருக்கும் நிலையில் விளை பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். அவசர மருத்துவ தேவைக்காக வெளியே செல்வதற்கும் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தார்ச்சாலை
108 ஆம்புலன்ஸ் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த ஊருக்கு வர வேண்டி உள்ளது. எனவே சாலையை மேம்படுத்தி தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.