சென்னை
வியாசர்பாடி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
|வியாசர்பாடி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் மொத்தம் 31 தெருக்கள் உள்ளன. பல்வேறு தரப்பு மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இங்குள்ள 12, 13, 14 ஆகிய தெருக்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தண்ணீர் நிறம் மாறி நுரையுடன் வருவதுடன், துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர்.
இதன்காரணமாக குழந்தைகள், மாணவர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும், மேலும் இந்த தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுபற்றி குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இதே பகுதியில் சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து இருப்பதால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தரவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.