< Back
மாநில செய்திகள்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இணையதளம் மூலம் பொதுமக்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இணையதளம் மூலம் பொதுமக்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்

தினத்தந்தி
|
22 Aug 2023 7:25 AM IST

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இணையதளம் மூலம் பொதுமக்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் தொலை தொடர்பு மருத்துவம் என்பது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் மக்கள் வீட்டில் இருந்து கொண்டே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெருவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இதன் மூலம் சுகாதார சேவைகளை ஒவ்வொரு மக்களின் வீட்டுக்கும் எடுத்து செல்லும் ஒரு உன்னதமான முறையாக உள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் தொலை மருத்துவத்தின் (டெலிமெடிசின்) மகத்துவத்தை அனைவரும் அறிந்தனர். சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய முடியாதவர்களுக்கு இந்த தொலை மருத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொலை மருத்துவம் எனப்படும் இணையவழி மருத்துவ ஆலோசனை சேவையை மக்களுக்காக தொடங்கி வைத்தார்.

அதன்படி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பொது மருத்துவ துறை பற்றிய ஆலோசனை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், பொது அறுவை சிகிச்சை பற்றிய ஆலோசனை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், குழந்தை நல மருத்துவம் பற்றிய ஆலோசனை செவ்வாயக்்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை வழங்கப்படுகிறது.

முதியோர் நோய் மருத்துவம் பற்றிய ஆலோசனை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மகப்பேறு மருத்துவம் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், தோல் நோய் மருத்துவம் பற்றிய ஆலோசனை திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com என்ற இணைப்பில் உபயோகித்து பயன் அடையலாம். இந்த இணையதளத்துக்கு சென்று சிறப்புத்துவம் தொடர்பான நேர ஒதுக்கீடுகளை தேர்வு செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

அதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் வரும். அதனை உள்ளீடு செய்து, இந்த சேவையில் இணைந்துகொள்ளலாம். அதன் பின்னர் அழைப்பு விடுப்பதற்கான வசதி வரும். அதன்பின்னர் சம்மந்தப்பட்ட டாக்டரை தொடர்புகொண்டு மருத்துவம் தொடர்பான பயன்களை பெறலாம்.

மேலும் செய்திகள்