சேலம்
நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
|தாரமங்கலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தாரமங்கலம்:-
தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும், பழுதடைந்து காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி துப்புரவு ஆய்வாளர் கோபிநாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் கவுன்சிலர்கள் சின்னுசாமி, சீனிவாசன், ஈஸ்வரன், வேதாசலம் ஆகியோர் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வருகிற மன்ற கூட்டத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.