திருவள்ளூர்
புழல் அருகே பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்
|புழல் அருகே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், குடியிருப்பு பகுதியில் வழிந்தோடுவதாகவும் புகார் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த புழல் சிறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திருமலை நகர் குடியிருப்பு பகுதியில் வழிந்தோடுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை நகரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திடீரென புழல் அருகே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனால் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.