< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தை மாணவர்களுடன் பொதுமக்கள் முற்றுகை-சாலை மறியல்
அரியலூர்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தை மாணவர்களுடன் பொதுமக்கள் முற்றுகை-சாலை மறியல்

தினத்தந்தி
|
8 Aug 2022 7:55 PM GMT

கலெக்டர் அலுவலகத்தை மாணவர்களுடன் பொதுமக்கள் முற்றுகை-சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்:

குறை தீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 318 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவா் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, திருமானூர் ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அவற்றை நோய் தாக்கியுள்ளது. பருத்தி பயிர்களையும் வெள்ளைப்பூச்சி தாக்கி அழித்து வருகிறது. தற்போது, கொள்ளிடத்தில் வந்த வெள்ள நீராலும் அவை பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர், வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

முன்னதாக நிருபர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், கொள்ளிடத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்டா பகுதிகளில் கரும்பு, நெல், பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

குறை தீர்க்கும் கூட்டத்தில் பாலாஜி என்பவர் கொடுத்த மனுவில், பாளையப்பாடி கிராமத்தில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அந்த தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, திருமழபாடி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

செந்துறை அருகே உள்ள சோழன்குடிகாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள், பள்ளி மாணவர்களுடன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 10 பேர் மட்டுமே உள்ளே சென்று மனு அளிக்க கூறினர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. ஆனாலும் அனைவரையும் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், போலீசாரை கண்டித்தும், கலெக்டர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறியும் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து மறியலை கைவிட்டு மீண்டும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிக்குள் விடாமல் தடுத்தனர்

அப்போது அவர்கள் கூறுகையில், சோழன்குடிக்காடு கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள், கோவில் திருவிழாவையொட்டி வைத்த பதாகைக்கு காவல்துறையை சேர்ந்த சிலரும், மாற்று சமூகத்தை சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நேற்று காலை ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோது, மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் மாணவர்களை பள்ளிக்குள் விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக மனு அளிக்க வந்ததாகவும், போலீசார் அனைவரையும் விடாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த கலெக்டர் ரமணசரஸ்வதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி, அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்