கரூர்
எச்சரிக்கையை மீறி குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள்
|மேட்டூர் அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் எச்சரிக்கையை மீறி குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடை உத்தரவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகம் வருவதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து தற்போது ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதன் காரணமாக காவிரி கரையோர பொது மக்களுக்கு அரசு சார்பில் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி கடந்த சில நாட்களாக வருவாய் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் ஆற்றில் குளிக்க கூடாது எனவும் ஆடு, மாடுகளை மேய்க்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கரை புரண்டோடும் தண்ணீரை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு வந்து தண்ணீர் செல்வதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஆற்றில் குளித்த பொதுமக்கள்
இது ஒரு புறம் இருக்கும் பட்சத்தில் கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து வருகின்றனர். எனவே பொதுமக்களை எச்சரிக்கும் வண்ணம் காவிரி ஆற்று பகுதிக்கு செல்லும் வழியில் எச்சரிக்கை பலகை வைப்பதோடு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஆற்றில் குளிப்பவர்களை தடுக்க முடியும். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முன்னெச்சரிக்கை தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.