கடலூர்
இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
|கடலூர் மாவட்டத்தில் இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பங்கேற்றார்.
துண்டுபிரசுரம்
கடலூர் மாவட்டத்தில் இணையவழி குற்றங்களை (சைபர் கிரைம்) தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் சார்பில் கடலூர் டவுன்ஹால் அருகில் நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை ஆட்டோக்களில் ஒட்டியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம். ஓ.டி.பி.யை யாரிடமும் பகிர வேண்டாம். கடன் செயலிக்குள் நுழைய வேண்டாம், ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடுவதை தவிர்க்க வேண்டும். முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பணம் பெறும் நோக்கில் நம்பும்படி பேசினால், அவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.
புகார் செய்யலாம்
இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணைய தளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது வரை இணைய வழி குற்றம் தொடர்பாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.34 லட்சம் உரியவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தான் அதிக மோசடி நடக்கிறது. ஆகவே பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, குருமூர்த்தி, போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.