நாமக்கல்
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
|கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.
முன்னேற்பாடு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு தொடர்பாக விண்ணப்ப பதிவு முகாம் நடத்துவது குறித்த முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் உமா பேசும்போது கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு தொடர்பாக விண்ணப்பபதிவு முகாம் நடத்துவதற்கு தேவையான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி முகாம் நடத்துவதற்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்களை உடனடியாக தொடர்புடைய அலுவர்கள் தேர்வு செய்திட வேண்டும்.
விழிப்புணர்வு
இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் மற்றும் தகுதியில்லாத பயனாளிகள் குறித்த விளம்பர பதாகைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், ரேஷன்கடைகள், தாசில்தார் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இம்முகாம்களில் ஈடுபடுத்தப்பட உள்ள ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் விவரங்கள் மற்றும் திட்ட செயலாக்கத்தை உடனடியாக மாவட்ட அளவிலான குழுவினர் தயார் செய்திட வேண்டும். இம்முகாம்களை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் செல்வகுமரன், உதவி கலெக்டர்கள் சரவணன், கவுசல்யா, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.