< Back
மாநில செய்திகள்
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில் பொதுமக்கள் நுைழய தடை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில் பொதுமக்கள் நுைழய தடை

தினத்தந்தி
|
8 Oct 2023 12:15 AM IST

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள அமைவிடத்தில்பொதுமக்கள் நுைழய தடை செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

குலசேகரன்பட்டினம்:

விண்வெளியில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

ராக்கெட் ஏவுதளம்

சொந்த நாட்டின் விண்கலங்களை மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் விண்கலங்களையும் குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்து வருகிறது. எனவே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தை தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

இதற்காக குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் கடலோரத்தில் அரைவட்ட வடிவில் 2,376 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தைச் சுற்றிலும் ரூ.6.24 கோடியில் தடுப்பு கம்பிவேலி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சாதகமான அம்சங்கள்

ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருப்பதால், இங்கிருந்து குறைந்த எரிபொருளில் அதிக எடையிலான விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தலாம். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை நாட்டின் மீது செல்லாமல், சுற்றி செல்லும் வகையில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் எரிபொருள் அதிகமாக செலவாகிறது.

குலசேகரன்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லாமல் நேரடியாக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடிவதால் 30 சதவீத எரிபொருள் மிச்சமாகிறது. மேலும் இங்கு குறைந்த காற்றழுத்தம், புயல் போன்ற பேரிடர்கள் நிகழாதவாறு இயற்கை அரண் சூழ்ந்து காணப்படுகிறது.

சிறியவகை செயற்கைக்கோள்கள்

மேலும் ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை நெல்லை மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு எளிதில் கொண்டு வர முடியும். எனவே, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவ்வப்போது நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

குலசேகரன்பட்டினத்தில் அடுத்த ஆண்டுக்குள் (2024) ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கிருந்து முதல்கட்டமாக 500 கிலோ எடையிலான சிறியவகை செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மேலும் குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளி துறைசார்ந்த தொழில் பூங்கா அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பொதுமக்கள் நுழைய தடை

இந்த நிலையில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தை பாதுகாப்பு கருதி, பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதியாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை சாலையான தூத்துக்குடி- திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையை ஒட்டியுள்ள படுக்கப்பத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதன் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமராபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கப்பத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அறிவிப்பு பலகை

அனுமதி பெறாத நபர்கள் இப்பகுதியை பயன்படுத்துவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் இடத்தில் ஆங்காங்கே இஸ்ரோ அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளது. அதில், ''இந்த இடம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு சொந்தமானது. இங்கு அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'' என்று தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்