புதிய அட்வகேட் ஜெனரலாக பி.எஸ்.ராமன் இன்று பதவியேற்பு
|கடந்த 2021-ம் ஆண்டு அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டிருந்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். கடந்த 2½ ஆண்டுகளாக அட்வகேட் ஜெனரல் பதவி வகித்து வந்த இவர் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்தை அரசும், கவர்னர் அலுவலகமும் நேற்று ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, புதிய அட்வகேட் ஜெனரலாக பி.எஸ்.ராமனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நேற்று இரவு கவர்னர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும், புதிய அட்வகேட் ஜெனரல் இன்று (வியாழக்கிழமை) காலையில் கவர்னர் மாளிகையில் உள்ள ஆவணங்களில் கையெழுத்திட உள்ளதாகவும், அதை தொடர்ந்து ஐகோர்ட்டில் அவரது அறையில் பதவியை ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
புதிய அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1985-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாக பணி செய்தார். 2004-ம் ஆண்டு இவரை மூத்த வக்கீலாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்தது.
இவர் ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். தற்போது, தமிழ்நாடு அரசின் சிறப்பு மூத்த வக்கீலாகவும், எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு வக்கீலாகவும் ஆஜராகி வருகிறார்.