கோயம்புத்தூர்
புரோசோன் வணிக வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்
|மழைநீர் கால்வாயை சேதப்படுத்தியதாக புரோசோன் வணிக வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
சரவணம்பட்டி
மழைநீர் கால்வாயை சேதப்படுத்தியதாக புரோசோன் வணிக வளாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
மழைநீர் கால்வாய் சேதம்
கோவை மாநகராட்சி சரவணம்பட்டி 21-வது வார்டுக்குட்பட்ட சத்தி சாலையில் புரோசோன் வணிக வளாகம் பகுதி மற்றும் சிவானந்தபுரம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு கடந்த மாதம் பூமி பூஜை போடப்பட்டது. தற்போது அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் புரோசோன் வணிக வளாகத்திலிருந்து வெளியேற 3 இடங்களில் கேட் அமைத்துள்ளனர். இதில் 2-வது கேட்டின் முன்புறம் சுமார் 25 அடி நீளத்தில் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் கால்வாயை வணிகவளாக நிர்வாகிகள் சேதப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புதிய தார் சாலையையும் சேதப்படுத்தி உள்ளனர்.
ரூ.1 லட்சம் அபராதம்
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளாகத்திற்கு சென்று நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதற்கு முறையான தகவல் தர மறுத்து விட்டனர். மேலும் நோட்டீஸ் கொடுத்தும் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனால் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல பொறியாளர் சார்பில் 2 நாட்களுக்குள் இடிக்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயை புரோசோன் வணிக வளாகத்தினர் சரி செய்ய வேண்டும் என்றும்,
மழைநீர் வடிகால் கால்வாயை சேதபடுத்தியதற்காக மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சம் அபராத தொகை கட்ட வேண்டும் என்றும் தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வணிக வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அப்போது அங்கு பணியில் இருந்த நிர்வாகத்தினர் நோட்டீசை வாங்க மறுத்து வணிக வளாகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை கிழித்து மாநகராட்சி ஊழியர்களை ஊதாசீனப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதனால் மாநகராட்சி ஊழியர்கள், வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மாநகராட்சி ஊழியர்கள் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம் மாநகராட்சி ஆணையாளர் பிராப்புக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் சம்பந்தப்பட்ட புரோசோன் வணிக வளாக நிர்வாகத்தினர் நோட்டீசுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புரோசோன் வணிக வளாகத்தின் மீது கோவை சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அந்த புகாரை தொடர்ந்து போலீசார் சி.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் தினசரி டைரி அறிக்கையை மாநகராட்சி வடக்கு மண்டல பொறியாளரிடம் வழங்கினர்.
தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.