தென்காசி
ரூ.26 லட்சத்தில் புதிய சாலை அமைக்க ஏற்பாடு
|நெற்கட்டும்செவலில் ரூ.26 லட்சத்தில் புதிய சாலை அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் யூனியன் நெற்கட்டும்செவல்- கீழப்புதூர் சாலையில் கல்லாற்றின் மேற்கு பகுதியில் பெரிய அணை உள்ளது. கல்லாற்றின் வடபுறம் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் எலுமிச்சை, தென்னை, வாழை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். எனவே அங்கு விவசாயிகள் வேளாண் இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை எடுத்து வரும் வகையிலும் வடபுறம் கரையில் சாலை அமைத்து தரும்படி நெல்கட்டும்செவல் பஞ்சாயத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கல்லாற்றின் வடபுறம் ரூ.26 லட்சத்தில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக வருவாய் துறை சார்பில், நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதுகுறித்து நெற்கட்டும்செவல் பஞ்சாயத்து தலைவர் பாண்டியராஜா கூறுகையில், ''விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லாற்றின் வடபுறம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 1300 மீட்டர் நீளத்தில் 28 மீ. அகலத்தில் பாதையை சீரமைத்து ரூ.26 லட்சத்தில் புதிய சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள நிலங்களை கையகப்படுத்தி புதிய சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்'' என்றார்.