< Back
மாநில செய்திகள்
வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்-விழிப்புணர்வு நிகழ்ச்சி - சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 27-ந்தேதி நடக்கிறது
சென்னை
மாநில செய்திகள்

வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்-விழிப்புணர்வு நிகழ்ச்சி - சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 27-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
24 Jan 2023 10:17 AM IST

வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்-விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 27-ந்தேதி நடக்கிறது.

சந்தாதாரர்கள் மற்றும் நிறுவனங்களின் நீண்ட நாளாக நிவர்த்தி செய்யப்படாத குறைகள், ஆன்லைன் சேவைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மற்றும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகாமையில் (நிதி ஆப்கே நிகத்) குறை தீர்ப்பு நிகழ்ச்சி ஆகியவற்றை வருகிற 27-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகத்தின் 8-வது தளத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடத்த உள்ளது.

அன்றைய தினம் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை பதிவு செய்தல், புதிதாக சேர்ந்த நிறுவனங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தின்படி, வேலை அளிப்பவர்கள், பணியாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து 9.30 மணி முதல் 11 மணி வரை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை பணியாளர்களுக்கு ஆன்லைன் சேவை குறித்தும், 11.30 மணி முதல் 12 மணி வரை வேலை அளிப்பவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் விளக்கப்படுகிறது.

மதியம் 12 மணி முதல் 1 மணி வரை புதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல், மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரை கருத்து கேட்பு, மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மத்திய மற்றும் மாநில அரசு துறைகளுடன் பேசி, குறைகளை தீர்த்தல் ஆகியவையும் நடைபெற உள்ளது. சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சந்தாதாரர்கள், பணியாளர்கள் தங்களது தீர்க்கப்படாத குறைகளுடன் அன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். குறை தீர்க்கும் வசதியை அன்றைய தினம் முழுவதும் பெறலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 சி.அமுதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்