< Back
மாநில செய்திகள்
நீட் தேர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திருச்சி
மாநில செய்திகள்

நீட் தேர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தினத்தந்தி
|
28 Aug 2023 3:49 AM IST

நீட் தேர்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாநாடு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில் 2-வது மாநில அளவிலான இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மிகச்சிறந்த மாநாடாக இது அமைய வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுவதும் 3½ லட்சம் இளைஞர்கள் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்து கொண்டாலே போதும் அதுவே ஒரு பெரிய கூட்டமாக இருக்கும் என்றார்.

நீட் தேர்வு போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கையோ, வரலாறோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. வெறும் ஆட்டமும், பாட்டமும், நகைச்சுவையும், கலை நிகழ்ச்சிகளும் மட்டுமே நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்தியவர்களுக்கு நாம் ஏன் இந்த மாநாட்டை நடத்தினோம் என்பதும் தெரியவில்லை.

தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை தி.மு.க.வின் இளைஞர் அணி நடத்தி வருகிறது. இனியும் தொடர்ந்து நடத்தும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அடிமை அ.தி.மு.க., ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நீட் தேர்வை உள்ளே அனுமதித்து விட்டது.

ஊழல் பட்டியல்

பா.ஜ.க.வின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சுமார் ரூ.7½ லட்சம் கோடி அளவிலான ஊழல் செய்துள்ளதாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ரூ.280 கோடி செலவிடப்பட்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 6 வழிச்சாலைக்கு அதில் கணக்கு காட்டியுள்ளனர். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் என்ற மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் ஊழல் செய்துள்ளனர்.

ஆனால் பிரதமர் மோடி எந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் கலைஞரின் குடும்பத்தை மட்டுமே குறிவைத்து பேசுகிறார். தமிழ்நாடு முழுவதுமே கலைஞரின் குடும்பம் தான் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன். ராகுல் காந்தி எம்.பி.யை திட்டமிட்டு பழி வாங்கி, அவருடைய பதவியை பறித்து பல பிரச்சினைகளை பா.ஜ.க. ஏற்படுத்தினாலும், ராகுல் காந்தி நீதிமன்றத்தின் வாயிலாக தன்னுடைய பதவியை மீண்டும் மீட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி 2024-ம் ஆண்டும் தொடரும். அதற்கான காலம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், இளைஞர் அணி, மாணவரணி அமைப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

==============

குட்டிக்கதை கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கூட்டத்தில் பேசியபோது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு குட்டிக்கதை கூறினார். அதன் விவரம் வருமாறு:-

இளைஞர் அணியாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு சிறிய கதை சொல்கிறேன். உன் வீட்டிற்குள் விஷப்பாம்பு ஒன்று வந்துவிட்டது. அந்த பாம்பை அடித்து சாகடிப்பதற்குள் அங்கிருந்து தப்பிச்சென்றது. மீண்டும் 2 நாட்களுக்குப் பிறகு அடிபட்ட அதே பாம்பு வீட்டுக்குள் வந்தது. இது எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும் போது, வீட்டிற்கு அருகில் இருந்த புதருக்குள் மறைந்திருந்து, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதில் வீடு என்பது தமிழ்நாடு ஆகவும், புதர் என்பது அ.தி.மு.க.வாகவும், விஷப்பாம்பு என்பது மத்திய பா.ஜ.க. அரசுமாக உள்ளது. எனவே இந்த விஷப் பாம்பை அகற்ற வேண்டும் என்றால், முதலில் வீட்டிற்கு அருகில் மண்டியுள்ள புதரை அகற்ற வேண்டும். புதரை அகற்றினால் பாம்பும் ஒழிந்து விடும். எனவே இளைஞர் அணியின் மாநாடு, விஷப் பாம்பை விரட்டக்கூடிய எழுச்சிமிகு மாநாடாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்