< Back
மாநில செய்திகள்
விவசாயியின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல எதிர்ப்பு-போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விவசாயியின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல எதிர்ப்பு-போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
3 Sept 2022 12:04 AM IST

ஆவுடையார்கோவில் அருகே விவசாயியின் உடலை ஊரின் வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

விவசாயி சாவு

ஆவுடையார்கோவில் அருகே வீரமங்கலம் கிராமம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் கந்தையா (வயது 75), விவசாயி. இவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஒரு ஆம்புலன்சில் மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ஒரு தரப்பினர் மயானத்திற்கு மாற்று வழி உள்ள நிலையில் ஊருக்குள் செல்லும் வழியில் கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவரின் உறவினர்கள் ஊர் வழியாகதான் முதியவரின் உடலை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. சொர்ணராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இருதரப்பினரிடமும் அதிகாரிகள் 5 மணி நேரம் பேசியும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) இருதரப்பினரையும் அழைத்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனைதொடர்ந்து முதியவரின் உறவினர்கள் 3 பேரை தவிர வேறு யாரும் அந்த வழியாக செல்லக்கூடாது எனக்கூறி போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சை அனுப்பி வைத்தனர். பின்னர் 5 மணி நேரம் கழித்து முதியவரின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்