காஞ்சிபுரம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
|பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களான பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், 144 தண்டலம், மேல் பொடவூர், ஏகனாபுரம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் மேலேறி உள்ளிட்ட 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி 4 ஆயிரத்து 791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி போன்ற கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் என்று கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
248-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்ததாக கூறி ஏகனாபுரம் பகுதி மக்கள் அங்குள்ள நடுநிலை பள்ளியில் படிக்கும் 117 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கைகளில் கருப்பு கொடியேந்திவாறு தங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தையொட்டி சாதாரண உடையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.