'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம்
|'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது.
கோவை,
இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ''டீசர்'' சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதையடுத்து இந்த படத்தில் சர்சைக்குரிய வகையிலான 10 காட்சிகள் நீக்கப்பட்டு புதிய 'டீசர்' வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என்றும் இந்த படம் திரைக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு இடையே 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளாவில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் காங்கிரஸ் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கோவையின் முக்கிய சாலையில் உள்ள வனிகவளாகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 12.45 மணியளவில் வெளியானது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினருக்கு எதிராக இந்த படத்தில் வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகும் திரையரங்குகளில் லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை.