< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்

தினத்தந்தி
|
6 Oct 2023 3:45 AM IST

பீகார் மாநிலத்தைப்போல் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


பீகார் மாநிலத்தைப்போல் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு

பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீண்ட காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாத காரணத்தால், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மத்திய, மாநில கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் 40 ஆண்டு காலமாக போதிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு இடையே 1992-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தும், இதுவரை மத்திய அரசு பணிகளில், 18 சதவீதத்திற்கும் குறைவான அரசு பணியிடங்களே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் மாநில அரசு சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் வெற்றிகரமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது.

மேலும் ஒடிசா உள்பட பல மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு

இந்த நிலையில் சமூக நீதியை முன்னெடுத்த முதல் மாநிலமான தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க தாமதம் செய்வதும் தவிர்க்க முயல்வதும் பிற்படுத்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் புறக்கணித்தால் இந்த மாத இறுதியில் அரசியல் சார்பில்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகள் கூட்டத்தை கூட்டி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் 69 சதவீதம் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் 78 சதவீதம் அளவுக்கு உள்ளனர். ஆனால் 26.5 சதவீதமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பி.சி.) இடஒதுக்கீடு கிடைக்கிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு உயர் சாதியினருக்கே பலனை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூட்டமைப்பு நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, வேலுசாமி, செந்தில், சண்முகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்