< Back
மாநில செய்திகள்
மின்தடையை கண்டித்து 2-வது நாளாக போராட்டம்: திரு.வி.க.நகரில் பொதுமக்கள் சாலை மறியல் - மின்வாரிய அலுவலகம் முற்றுகை
சென்னை
மாநில செய்திகள்

மின்தடையை கண்டித்து 2-வது நாளாக போராட்டம்: திரு.வி.க.நகரில் பொதுமக்கள் சாலை மறியல் - மின்வாரிய அலுவலகம் முற்றுகை

தினத்தந்தி
|
18 May 2023 3:00 PM GMT

மின்தடையை கண்டித்து 2-வது நாளாக திரு.வி.க.நகரில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் நீண்டநேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் பொதுமக்கள் தூங்க முடியாமல் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை திரு.வி.க.நகர், அம்பத்தூர், ஆலந்தூர் பகுதிகளில் மின்தடையை கண்டித்து 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு திரு.வி.க. நகர், பெரம்பூர், கக்கன்ஜி நகர், அழகர்சாமி தெரு, பெரியார் நகர், பன்னீர்செல்வம் தெரு, அகரம் பகுதியில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மின்சாரம் தடைபட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் குமரன் நகர் சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பாலாஜி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த திரு.வி.க. நகர் மற்றும் செம்பியம் போலீசார், சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதேபோல் சக்திவேல் நகர் முதல் தெரு முதல் 5 தெருக்கள் வரை நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரியார் நகர் மின்வாரிய அலுவலகம் சென்று கேட்டனர். தகுந்த பதில் கிடைக்காததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பெரவள்ளூர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதே போல் கொளத்தூர் கடப்பா சாலையில் அய்யன் திருவள்ளுவர் நகர், காமராஜர் நகர், சுபாஷ் நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் இரவு 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள நினைத்தால் தொலைபேசி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக கடப்பா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அந்த அலுவலகம் திறந்த நிலையில் உள்ளே இருந்த 3 அறைகளில் யாருமே இல்லாமல் காணப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாத அலுவலகம் எதற்கு? என்று கூறி வெளியே பூட்டு போட முயற்சித்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

வியாசர்பாடி, கொடுங்கையூர், செம்பியம், பெரம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 5-வது தெரு முதல் 18-வது தெரு வரை இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பக்தவச்சலம் காலனி பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.கே.பி.நகர் போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்