சென்னை
சென்னை நொச்சிக்குப்பத்தில் மீண்டும் வெடித்த போராட்டம்: சாலையில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் மறியல்
|சென்னை நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தது. கருப்பு கொடி கட்டி, படகுகளை சாலையில் நிறுத்தியும், மீன்களை சாலையில் கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரையிலான சர்வீஸ் சாலையோரம் உள்ள மீன் கடைகள் மற்றும் உணவகங்களை சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி அகற்றினர். இதனால் நொச்சிக்குப்பம் பகுதியில் 2 நாட்கள் போராட்டம் வெடித்தது.
கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் படகுகளை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வேலு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அப்போது 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி மீனவர்கள் இன்றைய விசாரணைக்கு பிறகு கோர்ட்டு என்ன உத்தரவிடுகிறது. ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?. அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பதை பார்த்த பிறகு மீனவ கிராமங்களின் மக்கள் ஒன்று கூடி பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்றும், அதுவரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமலும் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக சில மீனவர்கள் 3 படகுகளில் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் பிடித்து வந்த மீன்களை நொச்சிக்குப்பம் பகுதி சர்வீஸ் சாலையில் வைத்து விற்பனை செய்தனர். இதையறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அந்த கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
உடனடியாக, மீனவர்கள் தாங்கள் விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள் மற்றும் நண்டுகளை சாலையில் வீசினர். இதனால் அங்கு திடீரென மீண்டும் போராட்டம் வெடித்தது. அவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு சாலையோரத்திலும், தங்கள் கிராமங்களின் தெருக்களிலும் கருப்பு கொடியை கட்டியும், படகுகளை சாலையில் இழுத்து நிறுத்தியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் அதிகளவில் கூடினர்.
சாலையில் ஆங்காங்கே தாங்கள் வியாபாரத்துக்கு பயன்படுத்தும் ராட்சத குடைகளை நட்டு அதற்குள் பெண்கள் அமர்ந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை.
போராட்டம் குறித்து அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க நிறுவனத் தலைவர் எஸ்.ஏ.மகேஷ் கூறியதாவது:-
யாரையோ திருப்திபடுத்துவதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்தினர்.
மீனவர்களுக்கு சொந்தமான இந்த சாலையில், முதலில் 1 மணி நேரம் சாலையை பயன்படுத்த அனுமதி அளித்தோம், பின்னர் 2 மணி நேரமாக்கினார்கள். தற்போது 24 மணி நேரமும் வாகனங்கள் செல்கின்றன. இப்போது, எங்கள் மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று, தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கடலோடி பாண்டியன் கூறும்போது, "முதலில் இந்த பகுதியில் சாலையே கிடையாது. பின்னர் கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மண் சாலை போடப்பட்டது. பின்னர் அது தார் சாலையாக போடப்பட்டது. அதைதொடர்ந்து காங்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. நீதிபதிகள் இந்த சாலையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது என்றால், அந்த நேரத்தில் இங்கு போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். அதற்காக மீன் கடைகளை அகற்றக்கூடாது" என்றார்.
நேற்று மாலையும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.