திருநெல்வேலி
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
|நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட துணைத் தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நல்லபெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் தேவிகா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்தவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பிரசார செயலாளர் மாரிக்கண்ணு, மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடாசலம், இணைச்செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் பாஷ்யம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.