< Back
மாநில செய்திகள்
சுங்கச்சாவடி ஊழியர்கள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி போராட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சுங்கச்சாவடி ஊழியர்கள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி போராட்டம்

தினத்தந்தி
|
9 Nov 2022 1:33 AM IST

சுங்கச்சாவடி ஊழியர்கள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி போராட்டம் நடந்தது.

போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருமாந்துறை சுங்கச்சாவடியில் பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் சுமார் 130 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் 28 ஊழியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பேரையும் நிபந்தனை இன்றி மீண்டும் பணியில் சேர்க்கக்கோரியும், சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5-ந் தேதி தங்களது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை எரித்தும், மனிதசங்கிலி போராட்டமும் நடத்தினர்.

தூக்குக்கயிறு போன்று...

போராட்டத்தின் 39-வது நாளான நேற்று சுங்கச்சாவடி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் கழுத்தில் தூக்குக்கயிறு போன்று மாட்டி போராட்டம் நடத்தினர். இதில், தூக்குக்கயிறு போல கட்டி, அதனை தங்களது கழுத்தில் மாட்டியபடி நின்று போராட்டம் நடத்தினர்.

அப்போது திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான பணிநீக்க செயலை தனியார் நிறுவனங்கள் நிறுத்திவைக்க வேண்டும். ஏற்கனவே சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தங்களது வாழ்வாதாரத்தை பறித்து தங்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக சுங்கச்சாவடி நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை கண்டித்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை போராடுவதாக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்