< Back
மாநில செய்திகள்
கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்
மதுரை
மாநில செய்திகள்

கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

தினத்தந்தி
|
2 Sept 2023 2:30 AM IST

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருமங்கலம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கட்டண உயர்வு

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சி.ஏ.ஜி. அறிக்கையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களை அனுமதித்ததில் குறைவான வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் 25 சதவீதம் வாகனங்களுக்கு இலவசமாக அனுமதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

கட்டண வசூலில் மத்திய பா.ஜ.க. அரசு ஊழல் செய்துள்ளதாக கூறியும், 1-ந்் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வாலிபர்களுக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

இதனைத் தொடர்ந்து போராட்டமானது 30 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் சிங்காரவேலன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சி.ஏ.ஜி. அறிக்கையில் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டண வசூலில் ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது சுங்கச்சாவடி கட்டண உயர்வை அறிவித்து மக்களின் பணத்தை கொள்ளையடித்துவருகிறது, இதனை திரும்ப பெற கோரி தாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பா.ஜ.க. அரசுக்கு தற்போது சுங்கச்சாவடி ஊழல் அரசு என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சுமார் 80க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்