கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
|28 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 15 ஆண்டு காலமாக பணி செய்து வந்த 28 பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 38-வது நாளாக நீடித்தது. இதில் சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் சுங்கச்சாவடியில் புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த போராட்டக்காரர்கள், விரைந்து சென்று அங்கு பணியாற்றி வந்த புதிய பணியாளர்களை வெளியேற கூறினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய பணியாளர்கள் சுங்கச்சாவடி மையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.