< Back
மாநில செய்திகள்
டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
22 April 2023 2:31 PM IST

பெரியபாளையம் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்க தனியார் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் ஊராட்சியில் உள்ள பெரிய காலணியில் விநாயகர் கோவில் தெரு மற்றும் பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், குறைந்த அழுத்த மின்சார சப்ளை நடைபெறுவதால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தற்போது சுமார் ரூ.3 லட்சம் செலவில் விநாயகர் கோவில் தெரு முனையில் புதிய டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், நேற்று மதியம் 3 நபர்கள் டிரான்ஸ்பார்மர் இங்கு அமைக்க கூடாது என கூறி மின்வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் பணி பாதியில் நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கண்ட 2 தெருகளில் வசித்து வரும் பொதுமக்கள் பணி செய்ய விடாமல் தடுத்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே மின்வாரிய ஊழியர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக டிரான்ஸ்பார்மர் பணியை முடித்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என கூறி சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் பெரியப்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அந்த பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்