< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

தினத்தந்தி
|
8 Aug 2022 6:32 PM IST

நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்ததை கண்டித்து மின்வாரிய ஊரியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்ததை கண்டித்து மின்வாரிய ஊரியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார சட்ட திருத்த மசோதா

மத்திய அரசு மின்சார திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தம் மின்வினியோகத்தை தனியாரை அனுமதிக்கவும், மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது போன்றவற்றுக்கும் வழிவகை செய்வதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார்.

மசோதா தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை எதிர்த்து திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மின்வாரிய தொழிலாளர் சம்மேள நிர்வாகி சம்பத், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பாலாஜி, குரு, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி சரவணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி துரை, ஐ.டி.ஐ. சங்க நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும், ஊழியர்களும் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மின்கட்டணம் செலுத்த கடைசி நாளையொட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த நுகர்வோர்கள் பலர் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு எங்களுக்கு அபராதம் வசூலிக்கும் நிலை ஏற்படுமே என்ற புலம்பலுடன் திரும்பிச் சென்றனர்.

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் ஊழியர்கள், பணியாளர்கள் அனைவரும் அலுவலக நுழைவு வாயில் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு.கோட்ட தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின்சார திருத்த மசோதாவை கண்டித்து கோஷமிட்டனர். முடிவில் துணை செயலாளர் பாவேந்தன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்