< Back
மாநில செய்திகள்
100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
மாநில செய்திகள்

'100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்' - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தினத்தந்தி
|
7 Nov 2023 3:54 PM IST

100 நாள் வேலை திட்டத்தின் நோக்கத்தை மத்திய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து வருவதாக கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

சென்னை,

100 நாள் வேலை திட்டத்தைச் சிதைக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் நவம்பர் 15-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 2005-ல் நிறைவேற்றப்பட்டு கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில்தான் இத்தகைய விரிவான திட்டம் செயலுக்குக் கொண்டு வரப்பட்டது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பெரும்பாலும் பயனடைந்தவர்கள் பெண்களும், பட்டியலின மக்களும் ஆவார்கள்.

இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோடு மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் ஏழை,எளிய மக்களிடையே பொருளாதார புரட்சி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்ட சோனியா காந்தியை கிராமப்புற பெண்கள் இன்றும் பாராட்டி மகிழ்கிறார்கள்.

ஆனால், இத்திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் மத்திய பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. 2021-22 இல் ரூபாய் 98,468 கோடி ஒதுக்கிய நிலையில் 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூபாய் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூபாய் 73 ஆயிரம் கோடியை விட 18 சதவீதம் குறைவாகவும், 2022-23 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூபாய் 89 ஆயிரம் கோடி விட 33 சதவீதம் குறைவாகவும் இருந்தது.

இந்த நிதியாண்டில் 6 மாதங்களில் இந்த திட்டம் 6147 கோடி ரூபாய் தற்போது பற்றாக்குறையில் உள்ளது என்று இணையதளத்தில் மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பற்றாக்குறையின் விளைவாக ஆண்டுக்கு சராசரியாக வெறும் 17 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மோடி அரசு அநியாயமான முறையில் குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கையானது கிராமப்புற தொழிலாளர்களின் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால், தற்போது அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளை மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது. தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம் தான். போதுமான நிதியை வழங்குவதற்கு பதிலாக மத்திய அரசு தொடர்ந்து தேவையற்ற நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒதுக்கீட்டைக் குறைத்து, கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தின்படி வேலை கேட்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். அப்படி வேலை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.

ஆனால், மத்திய அரசு ஒதுக்குகிற நிதி சராசரியாக ஆண்டுக்கு 42 நாட்களுக்குத் தான் வேலை வழங்க முடியும். மீதியுள்ள நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. டிசம்பர் 14, 2022 நிலவரப்படி தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு ரூபாய் 4700 கோடி நிதி வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதன்மூலம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பலன்களை சிதைத்து வருகிறது.

கொரோனா காலத்தில் கிராமப்புற பொருளாதாரத்தை இத்திட்டம் தான் காப்பாற்றியது. கோடிக்கணக்கான மக்களை பட்டினி கொடுமையிலிருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கியது.

நாடு முழுவதும் தற்போது மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலமாக மொத்த பயனாளிகளான 6.49 கோடி குடும்பங்களில் 10 சதவீதத்தினர் மட்டும் தான் 100 நாள் வேலை வாய்ப்பை இதுவரை பெற்றுள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதால் கிராமப்புற தொழிலாளர்கள் புலம் பெயர்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் எந்த நோக்கத்துக்காக 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டதோ, அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து வருகிறது. இத்தகைய கிராமப்புற தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து, 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற நவம்பர் 15-ந்தேதி காலை 11 மணியளவில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

100 நாள் வேலை திட்டம் என்பது வறுமையை ஒழிக்க காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததாகும். அதை மோடி ஆட்சி புறக்கணிப்பதை எடுத்துக் கூறும் வகையில் மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தயாரித்த துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்