சீர்காழியில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு - 5 பேர் கைது
|சீர்காழியில் கவர்னர் ஆர்.என்.ரவி வருகைக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இந்த விவகாரத்தால் தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அதேபோல், கவர்னர் அரசியல் அமைப்பு விதிகளின் படி செயல்படவில்லை என்றும் ஜனநாயக மாண்புகளை மீறி செயல்படுவதாகவும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பல்வேறு அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று சீர்காழியில் உள்ள சட்ட நாதர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி கருப்புக் கொடி காட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கவர்னருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த 5 பேரை கைது செய்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.