< Back
மாநில செய்திகள்
எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: சுடுகாட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் - கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: சுடுகாட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் - கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்

தினத்தந்தி
|
14 Jun 2023 1:43 PM IST

கும்மிடிப்பூண்டியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெற்ற சுடுகாட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் 15-வது வார்டான மேட்டுகாலனி பகுதியில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தற்போது பேரூராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டு உள்ளது.

பல தலைமுறையாக ஒரு சமூகத்தினரின் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வரும் சுடுகாட்டில் தற்போது எரிவாயு தகன மேடை அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து பொன்னேரி உதவி கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடந்து முடிந்த நிலையில், நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு தகன மேடைக்கான பணிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் தொடங்கினர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்தும், அத்தகைய பணிகளை கைவிடக்கோரியும் கிராம மக்கள் குடும்பத்தோடு நேற்று கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்மிடிப்பூண்டி பஜாரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்த போலீசாரிடம் தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் கிராம மக்கள் சுடுகாட்டிற்கு அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தி எரிவாயு தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட கட்டுமான குழிகளை மூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இயைடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மற்றொரு சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்றும், அதுவரை எரிவாயு தகன மேடைக்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்