பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 13 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி
|பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களான பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம், தொடூர், ஏகனாபுரம், மகாதேவி மங்கலம், சிங்கிலிபாடி, எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் தொடர்ந்து 146-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை கைவிட வேண்டும், என்பதை வலியுறுத்தி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பாதிப்புக்குள்ளாகும் கிராம மக்கள் 2 ஆயிரத்திற்கும் அதிமானோர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு கைகளில் கருப்பு கொடி ஏந்தியவாறு கலந்து கொண்டு கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை
ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து தொடங்கிய பேரணி 500 மீட்டர் தூரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பேரணியாக வந்த கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, கிராம மக்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் கிராம மக்களின் பிரதிநிதிகள் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ அன்பரசன் ஆகியோர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. தெரிவித்தனர்.
போலீசார் பாதுகாப்பு
இதனை தொடர்ந்து கிராம மக்கள் பேரணியை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கண்ணீருடன் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிடாவிட்டால் மிக பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம மக்களின் பேரணியை தொடர்ந்து காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.