ஓ.பன்னீர்செல்வம் பேச அனுமதித்ததற்கு எதிர்ப்பு... சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
|முன்னாள் முதல் அமைச்சர் என்ற அடிப்படையில் பேச ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார்.
சென்னை,
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மசோதா மீதுஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு கட்சியில் சார்பிலும் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் மசோதாவிற்கு ஆதரவை தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் ஓ.பன்னிர்செல்வம் பேச அனுமதி அளித்தார். அப்போது பன்னீர்செல்வம் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அதிமுக சார்பில் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.
இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சி சார்பில் ஒருவரை பேச அனுமதித்துவிட்டு, அதிமுக சார்பில் இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தது ஏன் என சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பினார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கியதாக விளக்கம் அளித்தார். எனினும், சபாநாயகர் ஓபிஎஸ்-க்கு பேச வாய்ப்பளித்ததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.