நாமக்கல்
ராசிபுரத்தில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
|ராசிபுரம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்து வகை விடுப்பு, இருப்பு சான்று பணி பதிவிட்டு விடுப்பு பதிவுகளுடன் வழங்க வேண்டும். ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
நகராட்சி பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் வெண்ணந்தூர் ஜெகநாதன், ராசிபுரம் லட்சுமி, நாமகிரிப்பேட்டை மோகன்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.