< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா பிரமுகரை தாக்கிய நபர்களை கைது செய்யாவிட்டால் போலீஸ் நிலையங்களை முற்றுகையிடுவோம்-நாமக்கல்லில் அண்ணாமலை அறிவிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

பா.ஜனதா பிரமுகரை தாக்கிய நபர்களை கைது செய்யாவிட்டால் போலீஸ் நிலையங்களை முற்றுகையிடுவோம்-நாமக்கல்லில் அண்ணாமலை அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Jun 2022 12:05 AM IST

திருச்செங்கோடு பா.ஜனதா பிரமுகரை தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் முற்றுகையிடுவோம் என மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

நாமக்கல்:

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் நடந்தது. கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட பா.ஜனதா தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். நகர தலைவர் சரவணன் வரவேற்றார். மாநில துணை தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் பா.ஜனதா ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடத்தி வருகிறோம். இதே நேரத்தில் தி.மு.க.வினர் தங்களது ஓராண்டு சாதனை கூட்டங்களை நடத்துவதாக அறிவித்து நடத்தி வந்தனர். ஆனால் தேச பக்தர்கள் நம் கூட்டங்களுக்கு அதிக அளவில் வந்ததால், தி.மு.க.வினர் தங்களது சாதனை விளக்க கூட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனர்.

ஜி.எஸ்.டி. நிலுவை தொகை

எங்களை பொறுத்த வரையில் தி.மு.க. இதுவரை நிறைவேற்றிய திட்டங்களின் எண்ணிக்கை 15-ஐ தாண்டாது. மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. ஜி.எஸ்.டி. பணம் தரவில்லை என்றார்கள். அதனால் தான் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றார்கள். ஆனால் மே மாதம் 31-ந் தேதி ஜி.எஸ்.டி. நிலுவை தொகை ரூ.9 ஆயிரத்து 600 கோடியை மத்திய அரசு வழங்கி விட்டது. தற்போதைய நிலையில் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை எதுவும் இல்லை.

நீட் தேர்வு வேண்டாம் என 16 மாநில முதல்-மந்திரிகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை எந்த மாநில முதல்-மந்திரியும் பதில் எழுதவில்லை. நீட் தேர்வு வந்ததால் ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கட்டணத்தில் ஏழை மாணவர்கள் டாக்டராகி வருகிறார்கள்.

முற்றுகை போராட்டம்

திருச்செங்கோட்டில் பா.ஜனதா பிரமுகர் விஸ்வநாதன் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகளை 2 மாதம் ஆகியும் இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. இதற்காக பா.ஜனதாவினர் 2 முறை ஆர்ப்பாட்டமும், ஒரு முறை உண்ணாவிரத போராட்டமும் நடத்தி உள்ளனர். இந்த மாத இறுதிக்குள் விஸ்வநாதனை தாக்கிய நபர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூலை முதல் வாரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துக்குமார், மகேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சேதுராமன், நாகராஜன், வடிவேல், மருத்துவப்பிரிவு மாநில தலைவர் டாக்டர் பிரேம்குமார், மாவட்டத் தலைவர் டாக்டர் ஷியாம் சுந்தர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேவதி தர்மலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்